உள்ளூர் செய்திகள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பழைய விதிகள்படி மாணவர்களை சேர்க்க கோரிக்கை
மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பழைய விதிகள்படி மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
மத்திய அரசின் சார்பில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தில் பல இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, விருதுநகரிலும் இந்த பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் குழந்தைகள் முதலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதன்பிறகு மற்ற குழந்தைகளும் சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வருகிற 31ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர 5 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த விதிகள்தான் கடைபிடிக்கப்படுகிறது-.
இந்த நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு 6 வயது முதல் 8 வரையிலான குழந்தைகளை 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழக குழந்தைகளை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் 6 வயது முதல் 8 வரையிலான குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதாகவும், அதன் அடிப்படையில் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விதி வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 1ம் வகுப்புக்கான வயது வரம்பு 5 என்று இருக்கும் நிலையில் மத்திய அரசின் புதிய விதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கைக்கு தடையாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதிய விதியை கைவிட்டு பழைய விதிப்படி தமிழகத்தில் மாணவர் சேர்க்கையை அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தென்மாவட்ட எம்.பி.க்கள் மத்திய அரசிடமும், மத்திய கல்வி துறையிடமும் வலியுறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.