உள்ளூர் செய்திகள்
பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-03-03 15:31 IST   |   Update On 2022-03-03 15:31:00 IST
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பவானி:

பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

பவானி கூடுதுறை அருகே செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன்  கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது.

விழாவையொட்டி கடந்த  மாதம் 28-ந் தேதி அம்மனு க்கு  புனித நீராட்டு விழா நடந்தது. நேற்று  முன்தினம் மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று காலை பவானி புது பஸ் நிலையம் அருகே உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து  சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் குதிரையுடன் அம்மன் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

மேலும் பக்தர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்கள் உடலில் சேறு பூசி கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மிளகு, உப்பு, காய்கறிகள் மற்றும் கனி வகைகளை சூறை விட்டனர்.  இதை பொதுமக்கள் பலர் போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.

இதில்  இளைஞர்கள் பலர் சாமி வேடம் அணிந்தும், உடலில் வண்ணங்கள் தீட்டி கொண்டும் வந்தனர். சிறுவர்கள் உடலில் சேறு பூசி வேப்பிலையுடன் ஆடி கொண்டு வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் பழ வகை கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மதியம் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்கள் பலர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். இரவு பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்து வந்து வழிப்பட்டனர்.

இதனையடுத்து இன்று காலை திருகல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

பின்னர் செல்லியாண்டி அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

தொடர்ந்து கம்பம் எடுத்து ஆற்றில் விடும் விழாவும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளை  இரவு பரிவேட்டையும், 5-ந் தேதி இரவு   தெப்ப உற்சவம், 6&ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

Similar News