உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்தமாதம் 19ந்தேதி நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சியான பிறகு முதன்முதலாக தேர்தல் நடந்தது. இங்குள்ள 48 வார்டுகள், 4 நகராட்சிகளில் உள்ள மொத்தம் 171வார்டுகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 143 வார்டுகள் என மொத்தம் 362 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது-.
சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர்கள், விருதுநகர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்கள், ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர்கள், அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர்கள், சாத்தூர் நகராட்சியில் 24 வார்டு உறுப்பினர்கள் என 5 நகராட்சிகளிலும் 171 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதேபோன்று பேரூராட்சிகளில் செட்டியார்பட்டியில் 15 உறுப்பினர்கள், சேத்தூரில் 18 உறுப்பினர்கள், காரியாபட்டியில் 15 உறுப்பினர்கள், மம்சாபுரத்தில் 18 உறுப்பினர்கள், மல்லாங்கிணறில் 15 உறுப்பினர்கள், சுந்தரபாண்டியத்தில் 15 உறுப்பினர்கள், எஸ்.கொடிக்குளத்தில் 15 உறுப்பினர்கள், வ.புதுப்பட்டியில் 15 உறுப்பினர்கள், வத்திராயிருப்பில் 17 உறுப்பினர்கள் என 9 பேரூராட்சிகளில் 143 பேர் வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி அலுவலகங்களில் இன்று நடந்தது. சிவகாசி மாநகராட்சி, 5நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் மொத்தம் 362 வார்டு கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வார்டு கவுன்சிலர்களுக்கு ஆணையர்கள் பதவி பிரமாணம் செய்துவைத்தனர். பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கு செயல்அலுவலர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள்.
கவுன்சிலர்கள் பதவி யேற்பு விழாவை முன்னிட்டு சிவகாசி மாநகராட்சி, அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வார்டு கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்க அனுமதியில்லாததால், அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.