உள்ளூர் செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி திருவிழழ நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம், முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பரிவார பூஜையுடன், 100க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர்.
இதே போல், நேற்று மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோயிலில், மாலை 6 மணிக்கு சிறப்பு யாகத்துடன் பூஜைகள் நடந்தது.
காவேரிப்பட்டணம் பூங்காவனத்தம்மன் கோயில், பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோயில், திம்மாபுரம் அங்காளம்மன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஈஸ்வரன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாளை காலை சூலம் போடுதல் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறைக்கு புறப்படுதலும் நடைபெற உள்ளது.