உள்ளூர் செய்திகள்
வேட்டையாட சென்ற வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம்
ஊத்தங்கரை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர்கள், போலீசாரை பார்த்ததும் தப்பிவிட்டனர். அவர்கள் விட்டுச்சென்ற நாட்டுத்துப்பாக்கி&செல்போனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமம் முதல் மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் நேற்று இரவு ஊத்தங்கரை சப்& இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மூங்கிலேரி அடுத்த மண்ணாடிப்பட்டி காப்பு காட்டு சாலையோரம் செல்லும் போது, 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் வழியில் போலீசார் நிற்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு 4 வாலிபர்களும் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து போலீசார், அந்த 2 மோட்டார் சைக்கிள்களையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு நாட்டு துப்பாக்கி, மற்றும் முகத்துக்கு பொருத்தும் டார்ச், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய 4 வாலிபர்களும் யார்?, அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்று தெரிய வில்லை? இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
4 வாலிபர்களும், வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை வேட்டையாடி வருபவர்கள் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காட்டுக்கு செல்லும் வழியில் போலீசாரை பார்த்ததும் மிரண்டு போய் நாட்டுதுப்பாக்கி, செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.