உள்ளூர் செய்திகள்
கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்கியது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். சாம்பல் புதன் தினத்தில் இந்த நோன்பு தினம் தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு நோன்பு தினம் இன்று தொடங்கியது.
ஈரோடு:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். சாம்பல் புதன் தினத்தில் இந்த நோன்பு தினம் தொடங்குகிறது. அதன்படி இந்த ஆண்டு நோன்பு தினம் இன்று தொடங்கியது.
இதையொட்டி இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பல் (விபூதி) புதன் சிறப்பு வழிபாடுகள் இன்று காலை நடந்தது. இந்த பூஜையின் போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குருத்து ஓலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு சாம்பலாக வைக்கப்பட்டு, அது புனிதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் திருப்பலி நிறைவேற்றினார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6.30 மணிக்கும் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இந்த வழிபாடுகளின் போது பக்தர்களின் நெற்றியில் பங்கு தந்தையர்கள் விபூதி பூசி விடுவார்கள்.
தொடர்ந்து தினசரி தவக்கால நிகழ்வுகள் நடக்கின்றன. வெள்ளிக் கிழமைகளில் காலை 6 மணி, பகல் 11.30 மணி, மாலை 6 மணி என 3 நேரங்கள் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தியானித்து இந்த வழிபாடு நடக்கிறது.
ஏப்ரல் மாதம் 2-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பாரதி நகர் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து புனித அமல அன்னை ஆலயம் வரை பாத யாத்திரை யுடன் கூடிய சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. ஏப்ரல் 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும் அதைத்தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது.
ஏப்ரல் 10-ந் தேதி குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு குருத்தோலைகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்று வழிபாடு செய்கிறார்கள். ஏப்ரல் 14-ந் தேதி பெரிய வியாழன் வழிபாடு நடக்கிறது.
அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியின்போது பாதம் கழுவி முத்தமிடும் சடங்கும், நற்கருணை இடமாற்றும் நிகழ்வும் நடக்கிறது.
தொடர்ந்து நள்ளிரவு வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது. ஏப்ரல் 15-ந் தேதி காலை 6 மணி முதல் அமைதி ஆராதனை நடக்கிறது. பகல் 11 மணிக்கு பெரிய சிலுவைப்பாதை புனித அமல அன்னை ஆலய வளாகத்தில் நடக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு இறை இரக்க ஜெபமாலையும், அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருச்சிலுவை திருச் சடங்குகள் நடக்கின்றன.
ஏப்ரல் 16-ந் தேதி இரவு 10 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகளும் அதைத்தொடர்ந்து இயேசு கிறிஸ்து உயிர்த்து எழுந்த, ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி வழிபாடும் நடக்கிறது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஆகியோரி ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள்.