உள்ளூர் செய்திகள்
அறுவடை செய்ய ஆட்கள் இல்லாததால் கவுந்தப்பாடியில் கரும்புகள் காய்ந்து கிடக்கும் காட்சி.

கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் 10 ஆயிரம் ஏக்கர் கரும்புகள் அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு

Published On 2022-03-02 09:39 IST   |   Update On 2022-03-02 09:39:00 IST
நாட்டுசர்க்கரை தயார் செய்யவும் ஆட்கள் கிடைக்காததால் நன்கு வளர்ந்த கரும்புகள் வயல் வெளியில் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் கீழ்பவானி பாசனத் திட்டம், தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திட்டம், ஆற்றுப் பாசனம், குளம், கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் ஏரி பாசனத்தில் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகிறார்கள்.

கரும்பு பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகள் விளைந்த கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கும், வயல் வெளிகளில் ஆலை அமைத்து நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயார் செய்தும் வருகிறார்கள். தற்போது 10 ஆயிரம் ஏக்கரில் கரும்புகள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் 10 மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய கரும்புகள் 15 மாதங்களை கடந்தும் அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. ஆட்கள் பற்றாக்குறையால் தனியார் ஆலையும் கரும்புகளை வெட்டாமல் உள்ளது. நாட்டுசர்க்கரை தயார் செய்யவும் ஆட்கள் கிடைக்காததால் நன்கு வளர்ந்த கரும்புகள் வயல் வெளியில் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கவுந்தப்பாடி பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது கரும்புகள் நன்கு வளர்ந்துள்ளது. இந்த பகுதியில் கரும்பு ஏக்கருக்கு சுமார் 70 டன் கிடைக்கும். நாட்டுச்சர்க்கரை தயார் செய்தால் சுமார் 60 மூட்டை சர்க்கரை கிடைக்கும். தற்போது அறுவடை செய்ய ஆட்கள் பற்றாக்குறையால் 15 மாதம் வளர்ந்து காய்ந்து வரும் கரும்புகளால் குறைவான மகசூல் மட்டுமே கிடைக்கும். மகசூல் கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர்.

Similar News