உள்ளூர் செய்திகள்
கைதான செல்வம்

காட்டுபன்றியை வேட்டையாட வனப்பகுதியில் நாட்டு வெடியுடன் சுற்றிய முதியவர் கைது

Published On 2022-03-01 09:23 IST   |   Update On 2022-03-01 09:47:00 IST
தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை பவானிசாகர் பகுதியில் அதிக அளவில் வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் அடிக்கடி நாட்டுவெடிகளை வீசி வனவிலங்குகள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இதையடுத்து போலீசார் அடிக்கடி தீவிர சோதனை நடத்தி நாட்டு வெடிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பவானிசாகர் போலீசாருக்கு தொப்பம்பாளையம் பகுதியில் ஒருவர் காட்டு பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவரிடம் 10 நாட்டு வெடிகள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (59) என்பது தெரிய வந்தது. மேலும் காட்டுபன்றியை வேட்டையாட இந்த நாட்டு வெடிகளை வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை பவானிசாகர் பகுதியில் அதிக அளவில் வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். எனவே ஆபத்தான இந்த நாட்டு வெடி விபத்து ஏற்பட்டு மனித உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே நாட்டு வெடிகளை தயாரிப்பவர்கள் மற்றும் அதை வாங்கி வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News