உள்ளூர் செய்திகள்
ஓசூரில் தி.மு.க. நிர்வாகியின் ஓட்டல் காவலாளி கொலையில் துப்பு துலக்க 6 தனிப்படை அமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூரில் தி.மு.க. நிர்வாகியின் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திராம்பிகை ஏரிக்கரையில் ஒரு ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலை கிருஷ்ணகிரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கடலரசு மூர்த்தி நடத்தி வருகிறார்.
இவரது ஓட்டலில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த தாமோதரன் (வயது 60) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாமோதரன், ஓட்டலில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவில், ஓட்டலின் மேற் கூரை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல், கல்லாவில் இருந்த ரூ.17 ஆயிரத்தை திருடினர்.
அப்போது சத்தம் கேட்டு தாமோதரன் விழித்து வந்து பார்த்தார். அங்கு மர்ம கும்பல் திருடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே சுதாரித்து கொண்ட மர்ம கும்பல், தாமோதரனை தாக்கி அவரது கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே நேற்று காலை ஓட்டலுக்கு வந்த ஊழியர்கள், தாமோதரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், பணம் திருட்டு போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுபற்றி ஓசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ஏ.டி.எஸ்.பி. ராஜூ மற்றும் ஓசூர் டவுன் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி காமிரா காட்சிகளில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனிப்படை போலீசார், ஓசூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மற்றும் பெங்களூரு பகுதிக்கும் விரைந்துள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மர்ம கும்பலை பிடித்து கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.