ஈரோட்டில் ஒரே நாளில் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 9 ரவுடிகள் அதிரடி கைது
ஈரோடு:
ஈரோடு மாநகரில் சமீப நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து இரவு நேர ரோந்து பணியினை தீவிரப்படுத்தி ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.
இதன்பேரில், ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்த குமார் தலைமையில் ஈரோடு டவுன், கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு டவுன் போலீசார் வளையக்கார வீதி அடுத்த குப்பி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படியாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் ஈரோடு வெண்டிபாளையம் பாலதண்டாயுதபாணி வீதியை சேர்ந்த தினேஷ் என்ற பெங்களூரு தினேஷ் (23), வி.வி.சி.ஆர் நகர் முதல் வீதியை சேர்ந்த தீனா (20), அதேபகுதி 3-வது வீதியை சேர்ந்த கார்த்தி என்கிற பொய் கார்த்தி (23), அஜித்குமார் (21), கச்சேரி வீதியை சேர்ந்த முகேஷ்(22) ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.
இவர்கள், கூட்டு கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட திட்டம் திட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் இன்று கைது செய்தனர்.
இதேபோல், கருங்கல்பாளையம் போலீசார் மேற்கொண்ட ரோந்தில் வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக வி.வி.சி.ஆர் நகர் 3-வது வீதியை சேர்நத்த கார்த்திக் (21), அதேபகுதியை சேர்ந்த லட்சு மணன் (21), வளையக்கார வீதியை சேர்ந்த கவின்ராஜ் (22), மோசிக்கீரனார் 5-வது வீதியை சேர்ந்த 18 வயது வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ரவுடிகள் போன்று வலம் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்று ரவுடியிசம் செய்யும் கும்பல், பொதுமக்களுக்குத் தொந்தரவு செய்யும் கும்பல் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு சப்- டிவிஷனல் ஒரே நாளில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.