உள்ளூர் செய்திகள்
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து தொழிலாளி பலத்த தீக்காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் சண்முகையா என்பவர் ரோல்கேப் தயாரிக்கும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு ஆலமரத்துபட்டியை சேர்ந்த ராஜா (வயது 37) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை இவர் மட்டும் தனியறையில் பாம்பு மாத்திரை தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டு மருந்து தீ பிடித்தது. இதை சற்றும் எதிர்பாராத ராஜா தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயமடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 60 சதவீத தீக்காயங்களுடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.