உள்ளூர் செய்திகள்
சிறுத்தை தாக்கி பலியான ஆடுகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே 5 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தை பீதியில் உறைந்த கிராம மக்கள்

Published On 2022-02-26 11:02 IST   |   Update On 2022-02-26 11:02:00 IST
சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 55) விவசாயி. இவர் தனது வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து 5 ஆடுகள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது மஞ்சள் காட்டில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு இரவு வழக்கமான இடத்தில் கட்டி வைத்தார். நள்ளிரவு திடீரென நாய்கள் சத்தம் அதிகமாக கேட்டது.

இதையடுத்து முருகன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் சத்தம் போட்டு பேட்டரி டார்ச் அடித்து பார்க்கும் பொழுது சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது.

இதனையடுத்து பட்டியில் சென்று பார்த்தபோது சிறுத்தை அடித்து கொன்றதில் 5 ஆடுகளும் பலியானது தெரிய வந்தது. உடனே இது குறித்து சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான வனத்துறையினர் சம்பவயிடம் வந்து சிறுத்தையின் கால் தடத்தை ஆய்வு செய்தனர்.

மேலும் சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். விவசாயி கண்முன்னே ஆட்டை கடித்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News