உள்ளூர் செய்திகள்
கைது

84 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து மொபட் திருடனை கைது செய்த போலீசார்

Published On 2022-02-26 10:41 IST   |   Update On 2022-02-26 10:42:00 IST
உதவி செய்வதைப் போல் நடித்து தனபாலனின் மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு:

பவானி ராயல் தியேட்டர் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருபவர் தனபாலன். இவர் கடந்த 7-ந்தேதி தனது மொபட்டில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சென்று விட்டு பின்னர் பவானி நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அவர் சித்தோடு செல்லப்பம் பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு ரோட்டில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர்கள் அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவர் ஓட்டி வந்த மொபட்டை திருடி சென்றனர்.

இது குறித்து தனபாலன் சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சித்தோட்டில் இருந்து திருப்பூர் வரை 84 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுமார் 750 சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர்.

அப்போது தனபாலனின் மொபட்டை ஒரு வாலிபர் சித்தோட்டில் இருந்து திருப்பூர் வரை ஓட்டி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை பின்தொடர்ந்து சென்று அந்த வாலிபரை திருப்பூரில் மடக்கி பிடித்தனர்.

பின்னர் சித்தோடு போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் சிவசக்தி நகர் 1-வது வீதியை சேர்ந்த பிரபாகரன் (23) என்பதும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இவர் கடந்த 7-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள சென்று உள்ளார். பின்னர் வெப்படையை சேர்ந்த வேலு, கடலூரை சேர்ந்த வினோத் ஆகியோருடன் மீண்டும் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது வரும் வழியில் தனபாலன் மயக்க நிலையில் இருப்பதை கண்டு உதவி செய்வதைப் போல் நடித்து தனபாலனின் மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட மொபட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய வேலு, வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மோட்டார் சைக்கள் திருடனை சி.சி.டி.வி. கேமிரா மூலம் 84 கி.மீ தூரம் பின்தொடர்ந்து கைது செய்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Similar News