உள்ளூர் செய்திகள்
காரைக்குடி வழியாக விருதுநகருக்கு சரக்கு ரெயில்
10 ஆண்டுகளுக்கு பிறகு காரைக்குடி வழியாக விருதுநகருக்கு சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது.
விருதுநகர்
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து விருதுநகர் சரக்கு ரெயில்கள் திருச்சி, திண்டுக்கல், மதுரை ரெயில் நிலையங்கள் வழியாகவே இயக்கப்பட்டு வந்தன.
காரைக்குடி, மானா மதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகருக்கு அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த வழியாக சரக்கு ரெயில் இயக்கப்படவில்லை. அந்த வழித் தடத்தில் சிலம்பு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூரில் இருந்து விருதுநகருக்கு 21 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் முதன் முறையாக திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரெயில் தற்போதுதான் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய வழித்தடத்தில் இருந்து 31 கி.மீ. குறைவான தூரத்தில் சரக்கு ரெயில் வந்துள்ளது.
இந்த ரெயிலில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தானியங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்காக திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு நுகர் பொருள் வாணிபக்கழகம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.