உள்ளூர் செய்திகள்
கைது

சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்டவர் கைது

Published On 2022-02-25 12:52 IST   |   Update On 2022-02-25 12:52:00 IST
இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது விருதுநகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஆஜராகி இன்ஸ்டா கிராமில் உள்ள தனது புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வலை தளங்களில் பதிவிட்டு உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியது விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 33) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும் போது, பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம்.

சைபர் கிரைம் பற்றிய புகார்களை www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் பதிவிடலாம். மேலும் சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகளுக்கு 1930, 155260 என்ற எண்களில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் என்றார்.

Similar News