உள்ளூர் செய்திகள்
கொலை

காஞ்சிபுரம் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை

Published On 2022-02-25 11:52 IST   |   Update On 2022-02-25 14:53:00 IST
காஞ்சிபுரம் அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே உள்ள கொனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது50). தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா. கொனேரிக் குப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.

இன்று காலை சேகர் மோட்டார் சைக்கிளில் விப்பேடு பகுதிக்கு சென்றார். பின்னர் காலை 8.45 மணி அளவில் கொனேரிக்குப்பம் தலையாரி தெரு பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் கும்பல் சேகரை வழிமறித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சேகரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

கழுத்து, தலை, கையில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய சேகரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டி.எஸ்.பி. ஜூலியர் சீசர், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவம் இடத்தை ஆய்வு செய்தனர். கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. முன் விரோதத்தில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதையடுத்து சேகருடன் மோதலில் ஈடுபட்டவர்கள் யார்-யார் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது சேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழில் போட்டியிலும் மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

எனவே இந்த தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதட்டமான நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News