உள்ளூர் செய்திகள்
தேர்தல்

சிவகாசி மாநகராட்சி-5 நகராட்சிகளில் போட்டியிட்ட 554 பேர் டெபாசிட் இழப்பு

Published On 2022-02-24 15:40 IST   |   Update On 2022-02-24 15:40:00 IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகளில் போட்டியிட்ட 554 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம்,  ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ந்தேதி தேர்தல் நடந்தது. 

முதன் முதலாக தேர்தலை சந்தித்த சிவகாசி மாநகராட்சியில் 68.47 சதவீத வாக்குகள் பதிவாகின. 5 நகராட்சிகளிலும் 67.12 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்தநிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகின. 

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை  சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகளை  தி.மு.க. கைப்பற்றியது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வார்டில்  பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே,  தேர்தலில் போட்டியிட அவர்கள் கட்டிய டெபாசிட் தொகையை திரும்பபெற முடியும்.

அதற்கு குறைவாக வாக்குகள் பெற்றால் டெபாசிட்தொகை திரும்ப கிடைக்காது.  சிவகாசி  மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட்ட 268 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 10 பேர் உள்பட 161 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். 

அதேபோல் அருப்புக் கோட்டை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்ட 150 பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேர் உள்பட 81பேர் டெபாசிட்டை இழந்தனர். ராஜபாளையம் நகராட்சி யில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிட்ட 196பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 11பேர் உள்பட 112பேர் டெபாசிட் இழந்தனர்.

சாத்தூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிட்ட 94பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8பேர் உள்பட 42பேர் டெபாசிட் இழந்தனர். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் போட்டியிட்டவர்களில்  அ.தி.மு.க. வேட்பாளர்கள் 15பேர் உள்பட 86 பேரும், ஸ்ரீவில்லிபுத்துர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிட்ட 142பேரில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7பேர் உள்பட 72பேர் டெபாசிட் இழந்தனர். 

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சிகளில் மொத்தம் 554பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். டெபாசிட்டை இழந்தவர்களில் பா.ஜனதா, நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகளும் அடங்குவர்.

Similar News