உள்ளூர் செய்திகள்
சிவகாசி

சிவகாசி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார்?- பதவியை பிடிக்க கட்சியினர் தீவிரம்

Published On 2022-02-23 10:09 IST   |   Update On 2022-02-23 10:09:00 IST
சிவகாசி மாநகராட்சியில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
விருதுநகர்:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் வெளியானது. இதில் தி.மு.க. இமாலய வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாநகராட்சி சிவகாசி.

முதன்முறையாக மாநகராட்சி ஆக்கப்பட்ட பிறகு இங்கு உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடந்துள்ளது. சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 2 நகராட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டது தான் சிவகாசி மாநகராட்சி.

பட்டாசு, தீப்பெட்டி, அச்சகத்திற்கு புகழ்பெற்ற சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் இடம் பெற்றிருந்தன. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வசிக்கும் திருத்தங்கல் இந்த மாநகராட்சியில் தான் உள்ளது.

எனவே அ.தி.மு.க. இங்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க., - அ.தி.மு.க 32 வார்டுகளில் நேரடியாக போட்டியிட்டன. முதல்  முறையாக மாநகராட்சியாக சிவகாசி தேர்தலை சந்தித்ததால் இதில் வெற்றி பெற்று தங்கள் செல்வாக்கை நிரூபிக்க தி.மு.க., - அ.தி.மு.க இடையே கடும் பலப்பரீட்சை நடைபெற்றது.

தேர்தல் பிரசாரத்தின் போது இதனை பலரும் காண முடிந்தது. இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தி.மு.க. 24 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட அ.தி.மு.க. 11 இடங்களிலும் 4 இடங்களை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் சிவகாசி மாநகராட்சியை தி.மு.க. வசம் சென்றுள்ளது. இந்த மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதைபோல் துணை மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

வருகிற 4-ந் தேதி இந்த பதவிகளுக்கான மறைமுக தேர்தல் என்றாலும் தற்போது இருந்தே பலரும் ஆதரவை திரட்ட தொடங்கி விட்டனர். இதனால் சிவகாசி மாநகராட்சி முதல் பெண் மேயர் யார்? என்பதை நிர்ணயிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Similar News