உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க.வினர் முற்றுகை-சாலை மறியல்
அ.தி.மு.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த 19-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தலின்போது துப்புரவு பணியாளர்கள் பணியில் இருந்தனர். இதையடுத்து தங்களுக்கு தபால் ஓட்டு வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி 174 துப்புரவு பணியாளர்கள் தபால் ஓட்டுபதிவு செய்ய அனுமதி அளித்தார். அதன்படி அவர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையில் துப்புரவு பணியாளர்களின் தபால் ஓட்டுகளை முறைகேடு செய்து தி.மு.க.வினர் முறை கேடு செய்திருப்பதாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். எனவே அந்த தபால் ஓட்டுக்களை எண்ண கூடாது என்று அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருப்புக்கோட்டை கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமியை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். இதை கண்டித்து அருப்புக் கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அருப்புக்கோட்டை நகரச்சயலாளர் சக்திவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே கட்சியினர் அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை மறியல் முற்றுகை போராட்டம் காரணமாக அருப்புக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.