விருதுநகர் மாவட்டம் வ.புதுப்பட்டி பேரூராட்சியில் தபால் ஓட்டு பெட்டியின் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளின் மின்னணு வாக்கு எந்திரங்கள் 3 மையங்களில் வைத்து எண்ணப்படட திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் வ. புதுப்பட்டி பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வைத்து எண்ணப்பட்டது.
அங்கு இன்று காலை வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.இதில் முதலில் தபால் ஓட்டுக்களை என்ன அதிகாரிகள் தயாரானார்கள்.
இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டி வாக்கு எண்ணும் அதிகாரிகள் மேஜைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை திறந்து வாக்குகளை மேஜையில் கூட்டுவதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்றி நின்றனர்.
அப்போது தபால் ஓட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் சாவி கிடைக்கவில்லை. அது யாரிடம் இருக்கிறது என்பது தெரியவில்லை. பலரிடம் விசாரித்த போதும் அந்த பெட்டிக்கான சாவி எங்கே இருக்கிறது என தெரிய வில்லை. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தபால் ஓட்டுகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டை உடைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பெட்டியின் பூட்டு உடைக்கும் பணி தொடங்கியது. அதற்கான கருவிகள் வர வழைக்கப்பட்டு பூட்டு அறுத்து எடுக்கப்பட்டது.
அதன் பிறகு தபால் வாக்குகள் வெளியே எடுக்கப்பட்டன. தொடர்ந்து அதனை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். பூட்டு உடைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சம்பவத்தால் கிருஷ்ணன்கோவில் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதற்றமான நிலை காணப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் சகஜ நிலை திரும்பியது.