உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள

விருதுநகர் மாவட்டத்தில் நாளை 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை

Published On 2022-02-21 16:29 IST   |   Update On 2022-02-21 16:29:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 9 இடங்களில் வாக்கு எண்ணப்படுகிறது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய 5 நகராட்சிகள், காரியாபட்டி, மல்லாங்கிணறு, மம்சாபுரம்,  சேத்தூர், எஸ்.கொடிகுளம், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய 9 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.

மாவட்டம் முழுவதும் 758 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணி  வரை வாக்குப்பதிவு  நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அதன் பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறை  சீல்வைக்கப்பட்டது. தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அங்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  விருதுநகர் மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (22&ந்தேதி) எண்ணப்படுகிறது. 

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 9 இடங்களில் நடக்கிறது. சிவகாசி மாநகராட்சியில் பதிவான வாக்குகள் சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் எண்ணப்படுகிறது.

விருதுநகர் நகராட்சியில் பதிவான வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும், சாத்தூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எத்தல் ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையம் நகராட்சியில் பதிவான வாக்குகள் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் வி.பி.எம்.எம்.கலைக்கல்லூரியிலும், அருப்புக்கோட்டை நகராட்சியில் பதிவான வாக்குகள் தேவாங்கர் கலைக்கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன.

இதேபோல் 9 பேரூராட்சிகளில் காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சியில் பதிவான வாக்குகள் மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மம்சாபுரம், சேத்தூர், எஸ்.கொடிகுளம் பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள்   ராஜபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, செட்டியார்பட்டி, சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. காலை 10 மணிக்கு பிறகு முன்னணி நிலவரம் தெரியவரும். சிவகாசி மாநகராட்சியான பிறகு முதல் தேர்தல் என்பதால்  அதனை யார் கைப்பற்றுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. 

Similar News