உள்ளூர் செய்திகள்
அன்னை சமாதியை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காட்சி.

அரவிந்தர் அன்னை பிறந்தநாள்- சமாதியில் பக்தர்கள் தரிசனம்

Published On 2022-02-21 09:29 GMT   |   Update On 2022-02-21 09:29 GMT
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னை சமாதியை வணங்கி சென்றனர்.
புதுச்சேரி:

மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக இருந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீரா அல்பாசா.

இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878 பிப்ரவரி 21-ந் தேதி பிறந்தார். அரவிந்தரின் ஆன்மீக சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார்.

புதுவையில் அரவிந்தர் நிறுவிய ஆசிரமத்தில் பணியாற்றிய இவர் இங்கேயே தங்கி விட்டார். மனித குல ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக ஒரு இடம் விளங்க வேண்டும் என மகான் அரவிந்தர் விரும்பினார்.

அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் அன்னை மீரா ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கினார். அரவிந்தரின் பக்தர்களால் அன்னை என அழைக்கப்பட்ட மீரா அரவிந்தரின் மறைவுக்கு பின் ஆசிரமத்தை நடத்தி வந்தார்.

1973 நவம்பர் 17-ந் தேதி அன்னை மீரா மறைந்தார். ஆசிரமத்தில் அரவிந்தரின் சமாதிக்கு அருகிலேயே அன்னையின் சமாதியும் அமைக்கப்பட்டது. அரவிந்தர், அன்னையின் பிறந்தநாள், நினைவு நாளை ஆசிரமவாசிகளும், பக்தர்களும் வழிபட்டு வருகின்றனர்.

அன்னை மீராவுக்கு இன்று 144-வது பிறந்தநாள். இதையொட்டி அன்னையின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை மற்றும் பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னை சமாதியை வணங்கி சென்றனர்.



Tags:    

Similar News