உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கியில் வாக்கு பதிவு மையத்திற்கு ஆர்வமுடன் வரும் பெண்கள்
வாக்கு பதிவு மையத்திற்கு பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.27 வார்டுகளிலும் 34 ஆயிரத்து 638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 16 ஆயிரத்து 573 பேரும், பெண் வாக்காளர்கள் 18 ஆயிரத்து 65 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 27 பேரும் உள்ளனர்.
நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான லீமாசைமன் தலைமையில் கடந்த 4-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் 145 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 128 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து அந்தந்த கட்சி வேட்பாளர்கள், பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அனல் பறக்கும் பிரச்சாரம் கடந்த 17-ந் தேதி மாலை 6 மணியோடு ஓய்வுக்கு வந்தது.
இந்நிலையில் அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கும் 39 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் நாளான இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 39 வாக்குச்சாவடி மையங்களில் பதட்டமான வாக்குச்சாவடி ஏதும் இல்லை. ஆகையால் மக்கள் அமைதியான முறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கின்றனர்.