உள்ளூர் செய்திகள்
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளைமறுநாள்(19ந்தேதி) நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 பிரிவு 43பி.பி. அடிப்படையில் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி தேர்தல் நடைபெறும் நகர்ப்புற இடங்களில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகள் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பினை வழங்க வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில் களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும், தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுப்பு வழங்கவேண்டும். அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.
மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் 19ந்தேதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகார்களை 8807429192, 04562&252130 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொழிலாளர்கள் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.