உள்ளூர் செய்திகள்
.

குடிபோதையில் ஏரியில் மூழ்கி 2 பேர் பலி

Published On 2022-02-17 16:46 IST   |   Update On 2022-02-17 16:46:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே குடிபோதையில் ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளிகள் 2 பேர் இறந்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). தளி அடுத்த திப்பேன அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(43). இருவரும் கூலித்தொழிலாளிகள்.

இந்த நிலையில் நண்பர்களான ராஜப்பாவும்,  நாகராஜிம் நேற்று அங்குள்ள ஏரி அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது அதிக போதையில் இருந்த அவர்கள் 2 பேரும், ஏரியில் குளிக்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த ராஜப்பாவின் தங்கை ராணி , மதுபோதையில் ஏரியில் இறங்க வேண்டாம். தண்ணீரில் அதிகமாக உள்ளது என்று எச்சரித்தார்.

ஆனால் தங்கையின் அறிவுரையை ராஜப்பா, கேட்காமல் அலட்சியமாக பேசினார். பின்னர் ராஜப்பாவும், நாகராஜிம் ஏரிக்குள் இறங்கி குளித்தனர்.

அப்போது தண்ணீரில் இறங்கிய நாகராஜ் திடீரென மூழ்கினார். அவர் தத்தளிப்பதை கண்ட ராஜப்பா, அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றார்.

இதில் ராஜப்பாவும், நாகராஜிம் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தளி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  இதைத்தொடர்ந்து தளி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் ராஜப்பா உடல் மட்டும் கிடைத்தது. இரவு நேரமானதால் நாகராஜ் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இன்று காலையில் மீண்டும் நாகராஜ் உடலை தேடினர். பின்னர் அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

ஏரியில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

தங்கை எச்சரிக்கையை மீறி ஏரியில் குளிக்க சென்ற அண்ணன், மற்றும் அவரது நண்பர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News