உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விவசாயிகள் பயிர்க்காப்பிடு செய்துகொள்ள கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-02-17 15:54 IST   |   Update On 2022-02-17 15:54:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயிர் உற்பத்தி இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்கு வித்தல் போன்ற நோக்கங்களோடு  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தில்  செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குவதோடு விதைப்பு பொய்த்தாலும், நடவுசெய்ய இயலாத நிலை ஏற்பட்டாலும், அறுவடைக்குப் பிந்திய இழப்பு ஏற்பட்டாலும் பயன்பெற வழி உள்ளது.

மேலும் பகுதி சார்ந்த இயற்கை இடர்பாடுகளான புயல், ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பருவம் தவறிய மழை, வயல்களில் வெள்ள நீர் தேக்கம் மற்றும் அடை பருவகால இடர்பாடுகளால் இழப்புகள் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பயிர்களை போல, தோட்டக்கலை பயிர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி, ஆகியவற்றிற்கு வருவாய் கிராம அளவில்  காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய வாழைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2525 வரையிலும், மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1020 வரையிலும் மட்டுமே செலுத்தினால் போதும் மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய மாநில அரசுகளே ஏற்கின்றன. காப்பீடு செய்ய கடைசி நாள் வருகிற 28 ஆம் தேதி ஆகும்.

விவசாயிகள் நடப்பு ராபி பருவத்தில் பயிர் செய்த வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அதற்குரிய பிரிமியத் தொகை, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கடன் மற்றும் கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி விரைந்து காப்பீடு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Similar News