உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்தை தடுக்க அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதும் அதனை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவர, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வெம்பக்கோட்டை பகுதியில் சிலர் வெடிபொருட்களை பதுக்கிவைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிராஜ் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழ தாயில்பட்டி பகுதியை சேர்ந்த மாதவன்(வயது 24) என்பவரிடம் இருந்து 10 கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் டி. கோட்டையூரை சேர்ந்த முனீஸ்வரன்(50) என்பவரும் 10 கிலோ உதிரி வெடிகளை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். விஜயகரிசல்குளததை சேர்ந்த நல்லதம்பி (25) என்பவர் ஆயிரம் வாலா சரவெடிகள் மற்றும் உதிரி வெடிகளை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.