உள்ளூர் செய்திகள்
மின் வாரிய ஊழியர்-தொழிலாளி தற்கொலை
மின் வாரிய ஊழியர் மற்றும் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் சேவுகன். மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருக்கு வினோத் என்ற மகனும், விமல் என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகன் வினோத் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு 5 வருடத்திற்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
4 மாதத்திற்கு முன்பு வினோத்திற்கும், அவருடைய மனைவி தீபிகாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதில் இருந்து வினோத் மனவேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வினோத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை சேவுகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மேட்டுத் தொட்டியங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர்.
கந்தசாமி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் கந்தசாமியை பெற்றோர் சத்தம் போட்டனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கந்தசாமியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கந்தசாமியின் தந்தை சிவனாண்டி அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.