உள்ளூர் செய்திகள்
வாலாஜாபாத் பஜாரில் முதியவர் குத்திக்கொலை - வாலிபர் தப்பி ஓட்டம்
வாலாஜாபாத் பஜாரில் முதியவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் வாலாஜாபாத் ராஜ வீதி பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபருக்கும், முனுசாமிக்கும் திடீரெனதகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனுசாமியை, குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முனுசாமியை அக்கம் பக்கத்தினர். மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக உயிர் இழந்தார்.முனுசாமியிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் யார்? எதற்காக வாக்குவாதம் செய்தார் என்று தெரியவில்லை. ஏற்கனவே முன்விரோதத்தில் அவர் கொலை செய்ப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக பஜார் வீதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வாலாஜாபாத் போலீசார் ஆய்வு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.