உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர், திருவண்ணாமலையில் குறைகளை குவிக்கும் வாக்காளர்களால் சிக்கி திணறும் வேட்பாளர்கள்

Published On 2022-02-13 15:41 IST   |   Update On 2022-02-13 15:41:00 IST
வேலூர், திருவண்ணாமலையில் குறைகளை குவிக்கும் வாக்காளர்களால் வேட்பாளர்கள் சிக்கி திணறிவருகின்றனர்.
வேலூர்

வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். 

மீதமுள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 354 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் அதிகளவில் உள்ளனர். 

அரசியல் கட்சிகளின் பலத்தை விட, சுயேச்சைகள் பலமும் இருக்கும் என்று களத்தில் இறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் வீடு, வீடாக ஏறி இறங்கி ஓட்டு சேகரிப்பில் தீவிரம் காட்டியுள்ளனர். ஓட்டு சேகரிக்கும்போது பெண் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டு சமையல் அறை வரை சென்று வாக்கு கேட்கின்றனர்.

வாக்காளர்கள் அவர்களிடம் அடுக்கடுக்காக குறைகளை அடுக்குகின்றனர். வார்டுகளில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்பட பல அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் பட்டியலிடுகின்றனர்.

அவர்களும் சளைக்காமல், “இந்த கோரிக்கைகளை எல்லாம், தேர்தலில் வெற்றிபெற்று நிறைவேற்றுவேன்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.

ஒரு சில வேட்பாளர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று “ஓட்டு போட்டு என்னை வெற்றிபெற செய்தால், சொந்த செலவிலேயே செய்து கொடுக்கிறேன் என வாக்குறுதிகளை அளித்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.

திருவண்ணாமலையில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் அடுக்கடுக்காக குறைகளை தெரிவிப்பதால் வேட்பாளர்கள் பதில் சொல்ல தெரியாமல் திணறுகின்றனர்.

Similar News