உள்ளூர் செய்திகள்
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ முகாமை பார்வையிடுகிறார்.

தேர்தலுக்காக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை

Published On 2022-02-06 15:33 IST   |   Update On 2022-02-06 15:33:00 IST
தேர்தலுக்காக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
சீர்காழி:

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இவ்வாறு இறங்குமுகமாக இருக்கும் போதுதான் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு 170 வரை இருந்த நிலையில் தற்போது நாள் ஒன்று பாதிப்பு 70 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் நாள் ஒன்று தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தேர்தலுக்காக தொற்று பாதிப்பை குறைத்து காட்டப்படவில்லை. மும்பை, தாராவி, டெல்லி, கேரளா போன்ற பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை நன்றாக குறைந்துள்ளது.

2&வது அலையைவிட, 3&வது அலையில் உயிர் இழப்பு மற்றும் பாதிப்பு விழுக்காடு அதிகளவு குறைவாக உள்ளதற்கு தடுப்பூசி மக்கள் செலுத்திக் கொண்டதுதான் காரணம். அதோடு தற்போது முககவசம், சமூக இடைவெளி போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் 1.34 லட்சம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள நிலையில் தொற்று பாதிப்பாளர்கள் 4 சதவீதம் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். இனி வரும் காலங்களில் பொதுமுடக்க விலக்குகள் அதிகமாக இருக்கும், கட்டுபாடுகள் குறைக்கப்படும் என்றார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா, சீர்காழி கோட்டாட்சியர் நாராணன் மற்றும் சுகாதாரத் துறையினர் உடனிருந்தனர். தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வைத்தீஸ்வரன்கோவிலில் ரிசனம் செய்தார்.

Similar News