உள்ளூர் செய்திகள்
வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி

வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி

Published On 2022-02-06 15:04 IST   |   Update On 2022-02-06 15:04:00 IST
சென்னை குடியரசுதின விழாவில் பங்கேற்ற வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நாளை விருதுநகருக்கு வருகிறது.
விருதுநகர்

விடுதலை போரில்  தமி ழகம் என்ற தலைப்பில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட தமிழக வீரர்களின் பெருமைகளை விளக்கும் வகையில் கடந்த மாதம் 26ந் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் செய்திமக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. 

இந்த ஊர்திகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களுக்கும்  பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீரமங்கை வேலுநாச்சியார்  அலங்கார ஊர்தி நாளை(7ந்தேதி) விருதுநகர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளது.

இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1806ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர்புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை  மீட்ட வீரமங்கை வேலுநாச்சியா, வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுத  கிடங்கினை அழித்து தன்னுயிரை தியாகம் செய்த வீராங்கனை குயிலி, பரங்கியரின் ஆதிக்கத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததோடு, ஆங்கிலேயர் களின் ஆட்சியினை எதிர்த்து முதன்முதலில் தீரமாய் போரிட்டு தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட விடுதலை போராட்ட மாவீரர் வீரபாண்டிய  கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி மாவட்ட கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம்.

அன்னிய படைகளை தனியாக சென்று அழித்த நெற்கட்டும் செவலை பிறப்பிடமாக கொண்ட ஒண்டிவீரன்,  இந்திய விடுதலை வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு”  என்று முதன் முதலாக   வீரமுழக்கமிட்ட நெற்கட்டும்செவல் மாவீரன்  பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகுமுத்துகோன்.

வெள்ளையர்களை எதிர்த்து தீரமாய் போரிட்டு, தூக்கிலிடப்பட்ட மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திர போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாட்டுப்புற கலைஞர்களின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட  நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. அலங்கார ஊர்திகளை கொரோனா தடுப்பு குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும்.

இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.



Similar News