உள்ளூர் செய்திகள்
லதா மங்கேஷ்கர் மறைவு: புதுவை கவர்னர், முதல்-அமைச்சர் இரங்கல்
லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி புதுவை கவர்னர், முதல்-அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தனது இனிய குரல் வளத்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இசை ரசிகர்கள் அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்திருந்தார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவுச்செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. தனது 13 வயதில் பாடத்தொடங்கி தொடர்ந்து 70 ஆண்டுக்கும் மேலாக இந்திய மக்களின் மனதை இன்னிசை குரலால் ஆட்சி செய்தவர். பல்வேறு இந்திய மொழி களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், இந்தியாவின் இசை ராணியாக வலம் வந்தவர்.
வேறொருவரையிட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை அம்மையாரது இழப்பு ஏற்படுத்தியுள்ளது. இது அம்மையாரின் திறமைக்கும், உழைப்பிற்குமான சான்றாகும். அம்மையாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உலகெங்கிலும் உள்ள அவரின் ரசிர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.