உள்ளூர் செய்திகள்
படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்: வெளியூர் பக்தர்கள் 10 மணிக்கு பின்னர் அனுமதி
படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தில் வெளியூர் பக்தர்கள் 10 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் மகாகும்பாபிசேக விழா நாளை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது.
இக்கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா பார்வையிட்டார். சுமார் 100 அடிக்கும் மேலாக கட்டப்பட்டுள்ள புதிய 5 நிலை ராஜகோபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.
பின்னர் கோவில் தங்கும் விடுதியில் ஆரணி ஆர்.டி.ஒ. கவிதா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு ராமு, போளூர் தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் தரணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோகநாதன், முன்னாள் அறங்காவலர்கள் ஆர்.வி சேகர், முத்துக்கண்ணு, காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன், போளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் கும்பாபிஷேக விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உள்ளூர்பக்தர்கள், உபயதாரர்கள் உள்பட சுமார் 3000 பேருக்கு மட்டும் கலந்து கொள்ளவும், காலை 10 மணிக்குப் பின்னர் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்துள்ளனர்.
சந்தவாசல் சாலை, வீரகோவில், அனந்தபுரம் சாலையில் போலீசார் வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது, ஊராட்சி சார்பில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவும், சுகாதாரத்துறை சார்பில் கோவிட் பாதுகாப்பு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கவும் உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் மின் துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. தீயணைப்பு துறை சார்பில் தயாராக 2 தீயணைப்பு வண்டிகள் கோவில் அருகே நிறுத்தப்படும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.