உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் மோதி கால்நடை மருத்துவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பஸ் மோதி கால்நடை டாக்டர் பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வண்ணாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் வாசு என்கிற பாண்டியன். கால்நடை மருத்துவரான இவர் தற்போது குடும்பத்துடன் மத்தூரை அடுத்துள்ள மூக்காகவுண்டர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு ரஞ்சிதா (வயது27) என்ற மனைவியும், மணிஷ் (7), லோகேஷ் (5) என்கிற மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் வாசு காரப்பட்டில் உள்ள ஒரு தனியார் பால் குளிரூட்டும் உற்பத்தி நிலையத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார்.
இதையடுத்து நேற்று இவர் ஊத்தங்கரையில் இருந்து மத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தேரிப்பட்டி என்கிற இடத்தில் வந்த போது பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே வாசு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியான வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.