உள்ளூர் செய்திகள்
அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி.

தொகுதி எம்.எல்.ஏ.வை அழைக்காததால் பொது மக்கள் எதிர்ப்பு

Published On 2022-02-05 15:29 IST   |   Update On 2022-02-05 15:29:00 IST
கிராம மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வை அழைக்காததால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
புதுச்சேரி:
 
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதுவை ஊரக வளர்ச்சி முகமை சார்பில், பாகூர் தொகுதிக்குட்பட்ட மணபட்டு கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்தனர். 

அதன்படி இந்த கிராமத்தை, புதுவை எம்.பி., வைத்திலிங்கம் தத்தெடுத்து, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.இதற்காக, 22 துறைகள் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவிற்கு தெற்கு மாவட்ட துணை கலெக்டர் ரிஷிதா குப்தா தலைவராக இருந்து வருகிறார்.  இவர், மணப்பட்டு கிராமத்தில் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ.வை ஆலோசிக்கவில்லை. 

இந்நிலையில், மணப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க கிராம சபை கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பங்கேற்க  ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகள் நேற்று மணப்பட்டு அரசு பள்ளிக்கு வந்தனர்.ஆனால், இது தொடர்பாக, தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமாருக்கு, எந்த தகவலுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில், கூட்டத்தை முன்னின்று நடத்தக்கூடிய மாவட்ட துணை கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  

இதற்கிடையே தகவலறிந்த மணப்பட்டு கிராம மக்கள் அங்கு சென்று, தொகுதி எம்.எல்.ஏ., விற்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி தன்னிச்சையாக கூட்டத்தை நடத்தலாம் என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கப்படாததால், பொது மக்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News