உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-02-05 09:04 IST   |   Update On 2022-02-05 09:04:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கேட்டுகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா மற்றும் அதை சார்ந்த ஒமைக்ரான் தொற்றை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8,739 பேர் உள்ளனர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 வாரங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் என இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 723 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது மட்டுமல்லாமல் அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும், 2-வது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு இலக்கையே எட்டியுள்ளது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில் உள்ளவர்களை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் குறுஞ்செய்தி அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். இதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக கிடைக்கும். 2 தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என இந்திய மருத்துவ கழகம் அறிவித்துள்ளது.

நம்முடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க நாம் ஒவ்வொருவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா என்ற கொடிய நோயை அறவே ஒழிப்பதற்கான மிகபெரிய ஆயுதம் தடுப்பூசி ஆகும்.

எனவே இன்று நடைபெற உள்ள முகாமுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டு பயன் பெறுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News