உள்ளூர் செய்திகள்
விஷ்ணு, பிள்ளையார், கொற்றவை, தவ்வை சிற்பம்

8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Published On 2022-02-04 15:15 IST   |   Update On 2022-02-04 15:15:00 IST
தெள்ளாறு அருகே 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

தெள்ளாறு அருகே திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள பென்னாடகரம் கிராமத்தில் 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால சிலைகள் கண்டறியப்பட்டு உள்ளது. 

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம், உதயராஜா, சரவணன், விஜயன், கிருபாகரன் ஆகியோர் இணைந்து தெள்ளாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது பென்னாடகரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலின் அருகே சாலையோரம் இரு சிலைகள் இருப்பதை கண்டு ஆய்வு செய்தனர். 

இதில் அழகான வேலைபாடுகளுடன் அமைந்த விஷ்ணு சிற்பம் மண்ணுக்குள் கால்வாசி புதைந்து உள்ள நிலையில் இருகாதுகளிலும் அழகான மகர குண்டலங்கள் அணிந்து நிமிர்ந்து நேர் கொண்ட பார்வையுடன் பெரிய கண்களும், தடித்த உதடுகளும் கொண்டு காட்சி தருகிறார்.

மேலும் இந்த விஷ்ணு சிற்பத்திற்கு அருகே பலகை கல்லில் புடைப்பாக பிள்ளையார் சிற்பம் இருந்தது. மேலும் இவ்வூரின் ஏரிக்கரையின் வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருப்பதை கண்டு சுத்தம் செய்து ஆய்வு மேற்கொண்டதில் கொற்றவை சிற்பம் கண்டறிப்பட்டது.

இந்த கொற்றவை சிற்பத்தில் காணப்படும் ஆயுதங்கள், ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

மேலும் இவ்வூரில் தவ்வை சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இந்த பலகை கல்லில் மாந்தன் மாந்தியுடன் அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமந்த நிலையில் அமைந்துள்ளது. 

இது குறித்து ராஜ்பன்னீர் செல்வம் கூறுகையில்:-

இந்த சிற்பங்களை வைத்து இவ்வூரில் பல்லவர் கால கோவில் ஒன்று கால ஓட்டத்தால் அழிந்து உள்ளதை நம்மால் அனுமானிக்க முடிகிறது. 

சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த சிற்பங்களும், அதன் சிறப்பும் மகத்துவமும் அறியாமல் ஊர் மக்கள் அதனை சாலையோரமும், குப்பை மேட்டிலும் கிடத்தி வைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயம். ஊரின் தொன்மைக்கு சான்றாக உள்ள இது போன்ற சிற்பங்களை ஊர் மக்கள் முறையாக பராமரித்து பாதுகாத்திட வேண்டும் என்றார்.

Similar News