உள்ளூர் செய்திகள்
வேலூர் வங்கி மேலாளர் வீட்டில் நகை கொள்ளை
செய்யாறு அருகே வேலூர் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்யாறு:
செய்யாறு டவுன் சோழன் தெருவை சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 39). இவர் வேலூரில் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜாத்தி செய்யாறு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று சந்திரமவுலி வேலைக்கு சென்று விட்டார். ராஜாத்தி வீட்டை பூட்டிக் கொண்டு அவரது தாய் வீடான ஆரணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் வீடு திறந்து கிடப்பதாக சந்திரமவுலிக்கு போன் மூலம் தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக செய்யாருக்கு வந்தார்.
அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த செயின், வளையல், கம்மல் என 4 பவுன் திருடு போனது தெரிய வந்தது.
இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரமவுலி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.