உள்ளூர் செய்திகள்
பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப பணிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் பயணியர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில் 161 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த 161 வாக்குச்சாவடி மையங்கள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 9-ந் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் தயார்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் ஆரணி ஊராட்சி ஒன்றியம் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் ஆற்றுப் படுகைப் பகுதியில் நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், பனையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்கூர் கிராமத்தில் புல் வளர்த்தல், மரக்கன்றுகள் நடுதல், நீர்வரத்து கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திட்ட இயக்குனர் சந்திரா, உதவி கலெக்டர் கவிதா, ஆணையாளர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.