உள்ளூர் செய்திகள்
திருஞானசம்பந்தருக்கு இறைவன் பூதகணம் மூலம் பொற்கிழி அளித்த ஐதீக விழா நடைபெற்றது

கோமுக்தீஸ்வரர் கோயிலில் பொற்கிழி அளித்த ஐதீக விழா

Published On 2022-02-03 15:36 IST   |   Update On 2022-02-03 15:36:00 IST
திருவாவடுதுறையில் உள்ள ஸ்ரீ அதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நடைபெற்றது.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் உள்ள ஸ்ரீஅதுல்யகுஜாம்பிகை சமேத கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 5-ஆம் நாள் விழாவான நேற்று, திருஞான சம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்த ஐதீக விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்தர் தங்கி தரிசனம் செய்து வந்தார். அப்போது அவரது தந்தை சிவபாத இருதயன் உலக நன்மைக்காக தான் ஏற்பாடு செய்திருந்த யாகத்திற்கு, திருஞானசம்பந்தரிடம் பொருளுதவி கேட்டு திருவாவடுதுறை வந்தார்.

இதனையடுத்து திருஞான சம்பந்தர், கோமுக்தீஸ்வரர் கோவிலில் உலவாக்கிழி பதிகம் பாடி ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பெற்றதாக ஐதீகம்.

இந்த ஐதீக விழாவை போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் வீதியுலா வந்து கோமுக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினார். அங்கு உலவாக்கிழி பதிகத்தை ஓதுவார்கள் பாடினர்.

தொடர்ந்து கோவிலிலிருந்து பூதகணம் பொற்கிழியை சுமந்து வந்து, பலி பீடத்தில் வைத்து, பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புராண சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியில், திருவாவடு துறை ஆதீனம் 24&வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, திருமுறை இசை அறிஞர் 4 பேருக்கு ரூ.5ஆயிரம் அடங்கிய பொற்கிழியை வழங்கி ஆசியுரை வழங்கினார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News