பெரும்பாக்கத்தில் பஸ்சை தாமதமாக இயக்கியதை கண்டித்த கணவன்-மனைவி மீது டிரைவர் தாக்குதல்
சோழிங்கநல்லூர்:
சென்னை, பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி முருமா. கணவன்-மனைவி இருவரும் பாரிமுனை செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் பெரும்பாக்கம் பஸ் பணிமனைக்கு வந்தனர்.
அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அந்த பஸ் காலை 5.10 மணிக்கு புறப்பட வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் காலை 5.30 மணி ஆகியும் வண்டியை டிரைவர் எடுக்கவில்லை.
இதனை செந்திலும் அவரது மனைவி முருமாவும் கண்டித்தனர். இதனால் ஆத்திரம்அடைந்த டிரைவர் அவர்களை அவதூறாக பேசி 2 பேரையும் சரமாரியாக தாக்கினார். இதில் முருமா மயங்கி கீழே விழுந்தார்.
இதனை கண்ட மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயணிகளும் அங்கிருந்த பொதுமக்கள் ஏராளமானோர் டிரைவரை கண்டித்து பஸ்நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அங்கிருந்த பஸ் ஊழியர்களை தாக்கத் தொடங்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பயணிகள் மீது தாக்குதல் நடத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.