கெலமங்கலம் அருகே ஒற்றை யானை தாக்கி முதியவர் பலி
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த நார்ப்பனப்பட்டியை சேர்ந்தவர் சின்ன சின்னப்பா (வயது 70). இவர் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்து சென்று மேய்ச்சல் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இவர் மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், வனப்பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர்.
அப்போது அங்கு சின்ன சின்னப்பா , பிணமாக கிடந்தார். உடனே உறவினர்கள், அருகில் சென்று பார்த்த போது அவர், ஒற்றை யானை தாக்கியதில் பலியானது தெரிய வந்தது.
இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் நாகராஜன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கெலமங்கலம் போலீசாரும் சென்று விசாரித்தனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒற்றை யானை தாக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி வருவதால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
இதனால் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், மற்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்பவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளயே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.