உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- தி.மு.க. பிரமுகர் மகன் பலி
பண்ருட்டி அருகே விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே செம்மேடு மாரியம்மன் கோவில் தெரு அருணாசலம்.தி.மு.க. பிரமுகர். இவரது மகன் வேல்முருகன் ( 30 ). இவர் நேற்று பிற்பகல் 1மணி அளவில் மோட்டார் சைக்கிளில் செம்மேடு கிராமத்திலிருந்து ஏரிப்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏரிப்பாளையம் காலனி அருகே மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது எதிரில் வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் டிப்பர் லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.