உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நாளை பள்ளிகள் திறப்பு- கடலூர் மாவட்டத்தில் 2,200 பள்ளிகளில் முன் எச்சரிக்கை பணிகள் தீவிரம்

Published On 2022-01-31 15:50 IST   |   Update On 2022-01-31 15:50:00 IST
கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வந்ததால் இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பஸ், கார்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு 50 சதவீதம் மக்கள் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

தற்போது நாளுக்கு நாள் தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு வழிபாட்டுத் தலங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. நாளை (1-ந் தேதி) முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். ஆனால் பெற்றோர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது முன்னெச்சரிக்கை பணிகளில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏதேனும் கட்டிடம் பழுது, அமரும் நாற்காலி சீர் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகள் சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது மட்டுமன்றி பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள், கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவற்றில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் குறிப்பிட்ட மாணவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி அமர்த்தி பாடம் எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவின் பேரில் தற்போது ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News