உள்ளூர் செய்திகள்
ஆமை முட்டைகளை சேகரிக்கும் தன்னார்வலர்கள்.

கடலூர் கடலோர பகுதியில் 4 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு

Published On 2022-01-31 09:10 IST   |   Update On 2022-01-31 09:10:00 IST
கடலூர் கடலோர பகுதியில் 4 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவைகள் பொரிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
கடலூர்:

உயிரினங்களில் நீண்ட நாட்கள் வாழ்வது ஆமைகள். ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் ஒலிவ நிற சிற்றாமை என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை ஆமைகள் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் அதிக அளவில் காணப்படுகிறது. இவை இனப்பெருக்கத்திற்காக டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோரம் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

ஆனால் இந்த முட்டைகளை நாய், உடும்பு, காகம், கழுகுகள் சாப்பிட்டு விடும். இதனால் ஆமைகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தது. இதை தவிர்க்க கடலூர் மாவட்ட வனத்துறையினர், ஆமை முட்டைகளை கண்டறிந்து, அவற்றை குஞ்சு பொரிக்கும் வரை பாதுகாத்து, குஞ்சு பொரித்தவுடன் முட்டைகள் எடுத்த இடத்திற்கு சென்று குஞ்சுகளை கடலில் விட்டு வருகிறார்கள்.

அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆலிவ் ரெட்லி வகை ஆமைகள் கடலூர் மாவட்ட கடற்கரையோரம் வந்து முட்டையிட தொடங்கி உள்ளது. இதை மாவட்ட வன அலுவலர் செல்வம், வனச்சரக அலுவலர் அப்துல் ஹமீது, வனவர் குணசேகரன், வன காப்பாளர் ஆதவன், பாம்பு பிடி வீரர் செல்லா தலைமையிலான தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அதிகாலை நேரத்தில் கடற்கரையோரம் பயணம் செய்து அந்த முட்டைகளை சேகரித்து வருகின்றனர். அந்த முட்டைகளை தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அமைக்கப்பட்டு உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்து வருகின்றனர். இது வரை 34 ஆமைகளில் இருந்து 4 ஆயிரத்து 16 முட்டைகளை சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்துள்ளனர்.

இது பற்றி வனவர் குணசேகரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்ட கடற்கரையோரம் ஆமைகள் முட்டையிட்டு வருகிறது. இந்த முட்டைகளை பாதுகாத்து, அவை குஞ்சு பொரித்ததும் மீண்டும் கடலில் விட்டு விடுகிறோம். இந்த குஞ்சுகள் பொரிக்க 55 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும். தற்போது வரை 4 ஆயிரத்து 16 முட்டைகளை சேகரித்து உள்ளோம். இதற்காக அதிகாலை 3 மணிக்கே வனத்துறையினர், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் கடற்கரையோரம் உற்சாகத்துடன் பயணம் செய்வோம். அப்போது ஆமைகள் கடற்கரையோரம் வரும். அவை முட்டையிடும் வரை காத்திருந்து முட்டையிட்ட பிறகு அதை பாதுகாப்பாக எடுத்து வந்து, பொரிப்பகத்தில் வைத்து விடுவோம். சில நேரங்களில் ஆமைகள் முட்டையிட்டு சென்ற பிறகு அதை தேடி எடுப்போம்.

கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஆமை 164 முட்டைகள் இட்டது அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஆமை 155 முட்டைகள் இட்டு இருந்தது. ஒரே நாளில் 11 ஆமைகளிடம் இருந்து 1200 முட்டைகளை சேகரித் தோம். இந்த முட்டைகளை குஞ்சு பொரிக்க வைத்து கடலில் விட்டு விடுவோம். முட்டைகளை எங்கே எடுத்தோமோ அதே கடல் பகுதியில் தான் குஞ்சுகளை விடுவோம். இந்த குஞ்சுகளை தேடி கடலில் 5 நாட்டிக்கல் மைல் தூரத்தில் முட்டையிட்ட ஆமை காத்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

Similar News