உள்ளூர் செய்திகள்
திருக்கடையூர் கோயில் கும்பாபிஷேகம் தேதியை தருமபுர ஆதீனம் அறிவித்தபோது எடுத்த படம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்

Published On 2022-01-30 13:59 IST   |   Update On 2022-01-30 13:59:00 IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 27-ந்தேதி நடக்கிறது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது. 

தேவார பாடல் பெற்றதும், அபிராமி பட்டர் வாழ்க்கையில் அமாவாசையை பவுர்ணமி ஆக்கிய புராண நிகழ்வுகளும் உள்ளது. அஷ்ட வீரட்டேஸ்வரர் கோவில்களில் முதலாவது. 

எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயருக்கு அனுகிரகம் செய்த தலம். 60,80,100, வயது திருமணங்கள் செய்து வருபவர்களுக்கு ஸ்தலம் ஆயுள் 
விருந்தி தந்து அருள்பாலித்து வருகிறது.

இக்கோவிலின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த ஒருவருட காலமாக பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் திருக்கடையூரில் கும்பாபிஷேக பணிகள் குறித்து தருமபுரம் ஆதீனம் 27&வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் திருப்பணிகள் முடியும் 
தருவாயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற மார்ச் 27-ந்தேதி காலை நடைபெறவுள்ளதாக கூறினார். 

இதனை அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி 73 குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளது. பக்தர்கள் அரசு வழிகாட்டு முறைகளின்படி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அப்போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News