உள்ளூர் செய்திகள்
கடலூர் பஸ்நிலையத்தில் சுகாதாரமற்ற கழிவறையால் பொதுமக்கள் கடும் அவதி
கடலூர் பஸ்நிலையத்தில் சுகாதாரமற்ற கழிவறையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் மூலம் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
கடலூர் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறை உள்ளது. இந்த கழிவறை சரியான முறையில் பராமரிக்காததால் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. மேலும் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் அருவருப்பாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் கழிப்பறைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் கழிவறைக்குச் செல்லாமல் அருகாமையில் சிறுநீர் கழிப்பது போன்றவைகள் செய்வதால் பஸ் நிலையம் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு பிறகும் இது போன்ற அவல நிலைகள் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் நோய் பரவும் அவலம் ஏற்படாமல் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.