உள்ளூர் செய்திகள்
குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலி

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலி - உறவினர்கள் மறியல்

Published On 2022-01-29 15:46 IST   |   Update On 2022-01-29 15:46:00 IST
சிதம்பரம் அருகே குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் பலியான சம்பவம் குறித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கூலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தை உள்ளது. எனவே விஜயலட்சுமி குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்தார்.

அதன்படி விஜயலட்சுமி ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பகட்டுப்பாடு செய்தார். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. உடனடியாக விஜயலட்சுமி சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தால் திருநாவுக்கரசு மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் சரியாக சிகிச்சை அளிக்காததால் விஜயலட்சுமி இறந்ததாக கூறினர்.

இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் திருநாவுக்கரசின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென இன்று காலை 9 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Similar News