உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி சிறுவன் கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
பண்ருட்டி அருகே சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் அஸ்வின் (வயது 4). இவன் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் எங்கு தேடியும் அஸ்வின் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாயமான சிறுவனை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு சிறுவனின் உறவினர்கள் சென்னை கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்ட் சபியுல்லா காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வின் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததால் அவனை யாரேனும் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அஸ்வின் வீட்டின் அருகே ரஞ்சிதா (25) என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்களது குடும்பத்திற்கும் அஸ்வின் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சிதா சிறுவன் அஸ்வினை அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் ரஞ்சிதாவை கைது செய்தனர்.இதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருக்கும் சிறுவன் அஸ்வினின் உடலை வாங்க மறுத்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கீழக்கொல்லை கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் சிவசுப்பிரமணியன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்ட் சபியுல்லா போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை உரிய நஷ்ட ஈடு மற்றும் தொகுப்பு வீடு ஆகியவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.